ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் 5 சிறுவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோரை மீளாத் துயரத்தில் தள்ளியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் உள்ள சாய்பாஷா சதார் மருத்துவமனையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தலசீமியா எனப்படும் மரபுவழி மரபணு மாற்றத்தால், ரத்தத்தில், ஹீமோகுளோபின் பற்றாக்குறை உடைய 7 வயது சிறுவனுக்கு ரத்தம் மாற்றப்பட்டிருக்கிறது.
அடுத்த சில நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி அந்தச் சிறுவனுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது பெற்றோரை அதிர்ச்சியில் உறைய செய்தது. உடனடியாக மருத்துவமனையின் அலட்சியம் குறித்து காவல்துறை ஆணையரகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பின்னரே இந்த விவகாரம் பூதாகரமானது… மாநில அரசு 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டது. அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 4 சிறுவர்களுக்கு ரத்தம் மாற்றப்பட்டிருப்பதும், அவர்களுக்கும் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… முதற்கட்ட விசாரணையில், சாய்பாஷா சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ரத்த மாதிரி பரிசோதனை பதிவேடுகளைப் பராமரித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் என எதையுமே முறையாகச் செய்யாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
ஏழு வயது சிறுவனுக்கு 25 யூனிட் இரத்தம் மாற்றப்பட்டதாகவும், ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையின் அறிக்கையில்தான், எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எச்ஐவி தொற்று பரவ இன்னும் பிற காரணங்கள் உள்ளதாகக் கூறியுள்ள மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சுஷாந்தோ குமார் மாஜி, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமாகவும் கூட எச்ஐவி தொற்று பரவும் என்று கூறியிருக்கிறார்.
எனினும் ரத்தம் மாற்றப்பட்டதன் மூலம்தான் எச்ஐவி பரவியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணரின் அறிக்கையைக் கேட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்.
ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 512 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாகவும், 56 தலசீமா நோயாளிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் எனப் பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மருத்துவ அலட்சியத்தை தங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சிறுவர்களுக்கு ரத்தம் மாற்றப்பட்ட விவகாரத்தில், மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநில அரசு முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கிறது.
















