மதுரை செல்லூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதாலும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டில் அமெரிக்கன் மிஷன் தெரு, பாலம் ஸ்டேஷன் ரோடு, சிவன் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது.
இதனால் துர்நாற்றமும், நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் சூழலில், குடிநீருடனும் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் 6 மாதங்களாகப் புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தெருக்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் நடமாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் செல்வதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மேலும், குழந்தைகளும், முதியவர்களும் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழலும் நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செல்லூர் கபடி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுகுறித்து பேட்டியளித்த பொதுமக்கள், பணம் வாங்கிக்கொண்டுதானே ஓட்டு போட்டீர்கள் என அதிகாரிகள் கேட்டதாகக் குற்றம்சாட்டினர். தத்தநரி முதல் செல்லூர் ஸ்டேஷன் ரோடு வரை பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாகப் பாதாள சாக்கடை குழாய்களும், குடிநீர் குழாய்களும் உடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இனியும் தாமதிக்காமல் உடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















