புதுச்சேரியில் புதியதாக 25 புதிய மின்சார பேருந்து மற்றும் 38 மின் ரிக்ஷா சேவையை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரியில் முதல் முறையாக போக்குவரத்து துறை சார்பில் 23 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார பேருந்துகள் மற்றும் மின் ஆட்டோ ரிக்சா சேவைகள் தொடங்கப்பட்டன. மறைமலை அடிகள் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் மின்சார பேருந்துகள் சேவையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், எம்.பி செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில், புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது எனக் கூறி சுயேட்சை எம்எல்ஏ நேரு, நிகழ்ச்சியை புறக்கணித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
















