சேலத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சாத் பூஜையை விமரிசையாக கொண்டாடினர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகளில் சாத் பூஜையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், சேலத்தில் வசிக்கக்கூடிய பீகாரைச் சேர்ந்தவர்கள் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் செயற்கை முறையில் குளம் அமைத்து விரதம் கடைபிடித்தனர்.
சாத் பூஜையையொட்டி குளத்து நீரில் இறங்கி பூஜைப் பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும், பூஜை மேற்கொண்டவர்கள் கால்களில் விழுந்து வணங்கியும் வழிபாடு நடத்தியதுடன் சூரிய பகவானுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பீகார் மக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சவுகார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.
36 மணி நேரம் விரதம் இருந்த பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பூ, பழம், இனிப்புகள், நோன்பு கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை கடற்கரையில் வைத்து சூரியனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















