பழனி தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் சண்முகர் – வள்ளி – தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த 22ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு வள்ளி, தெய்வானையை மணமுடித்து வைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சண்முகருக்கு பதினாறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சண்முகருக்கு தீபாராதனை காட்டப்பட்ட நிலையில், சண்முகர் – வள்ளி – தெய்வானை திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















