கோவை மக்கள் தான் தனக்கு பாதுகாப்பு என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை புரிந்துள்ளார். தொடர்ந்து அவர் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கிடையே இரண்டு பேர் பாதுகாப்புகளை கடந்து குடியரசு துணைத் தலைவர் செல்லக்கூடிய பாதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
அப்போது குடியரசு துணைத் தலைவரை காண வந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரைம் பிடித்ததாக போலீசார் தெரிவித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து தன்னை காண காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினரை சி.பி.ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்தே சென்று சந்தித்தார். அப்போது எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை, கோவை மக்களே தனக்கு பாதுகாப்பு என பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அத்துமீறி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் எதிரே வந்த வாகனத்தில் மோதி சாலையில் விழுந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும் இருவரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
















