தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குஜராத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான வரும் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படும் எனக் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
சர்தார் வல்லபாய் படேலின் மிக உயரமான சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு தேசிய ஒற்றுமை தினத்தை மாநில அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் கெவாடியா பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குஜராத், அசாம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள நாய்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், ராம்பூர் ஹவுண்ட் மற்றும் முதோல் ஹவுண்ட் ரக நாய்கள் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டன.
அகில இந்திய போலீஸ் நாய் போட்டியில் முதலிடம் வென்ற முதோல் ஹவுண்ட் வகையைச் சேர்ந்த ரியா என்ற நாய் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டது.
















