நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சம்பத் என்பவர் தனது பட்டா நிலத்தில் பொதுப்பாதை உள்ளதாகக் கூறி அங்குப் பள்ளம் தோண்டியுள்ளார்.
இதனால் பக்கத்து கிராமங்களுக்குச் செல்லப் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி ராசிபுரம் – ஆட்டையாம்பட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
















