காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், ‘டோக்கன்’ வாங்கிய விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை நீடிக்கிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, 6 புள்ளி 50 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரிலும் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது.
இதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி அதிகரித்துவரும் நிலையில், கொள்முதல் செய்வதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மூட்டை நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.
இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொள்முதல் செய்வதற்காக ‘டோக்கன்’ வழங்கிய கொள்முதல் மைய அதிகாரிகள், பணிகளை தொடங்காமல் தட்டிக்கழிப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















