மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில் மதுரை மாநாகராட்சிக்கு உட்பட்ட செல்லூர், தத்தனேரி, சிம்மக்கல், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.
மொத்தமாக உள்ள 100 வார்டுகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழைநீரால் ஏற்கனவே துயரத்திற்குள்ளாகி வரும் மக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 வார்டுகளில் 16 மழைநீர் வடிகால் பணிகள் 82 கிலோ மீட்டருக்கு நடைபெற்றிருப்பதாகவும், 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 60 கிலோ மீட்டர் தூரத்திலான கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பு ஒன்றை மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதோடு தாழ்வான பகுதிகளாக 146 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும்போது சென்னை மாநகராட்சி தெரிவித்த தகவலுக்கும் களத்தின் உண்மை நிலவரமும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் எழுந்திருக்கும் சொத்துவரி முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணியிலும் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட தொகையை முறையாகப் பயன்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடித்திருந்தால் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் சாலைகள் மட்டுமல்லாது பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதோடு, மழைநீரோடு கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுகாதார சீர்கேட்டை சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்தும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















