அணுக்கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செர்னோபில்லில் வாழும் நாய்கள் திடீரென நீல நிறமாக மாறியுள்ளன. காரணம் இதுவரை தெளிவாகத் தெரியாத இந்த மாற்றம் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில், 1986-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய அணு உலை வெடிப்பின் நினைவாக இன்றளவும் உலகம் முழுவதும் அறியப்படும் இடமாகும். அங்குள்ள கதிர்வீச்சின் அளவு மனிதர்களுக்கான பாதுகாப்பு அளவைவிட 6 மடங்கு அதிகமாகச் சுமார் 11.28 மில்லி ரெம் அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து மனிதர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், செர்னோபில் விலங்கினங்களின் வாழ்விடமாக மாறியது. சுமார் 18 சதுர மைல் பரப்பளவுகொண்ட செர்னோபில் விலக்கு வலயத்தை 700-க்கும் மேற்பட்ட நாய்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள நாய்களை பராமரித்து வரும் “DOGS OF CHERNOBYL” என்ற அமைப்பு, 2017-ம் ஆண்டு முதல் அவற்றுக்கு உணவு, மருந்து போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சில நாய்களின் ரோமங்கள் நீல நிறமாக மாறியிருப்பதை அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
அதில் ஒரு நாய் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ள புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் வரை இயல்பான நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கு, தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், என்ன நடந்தது என்பதை அறிய அவற்றைப் பிடிக்க முயன்று வருவதாகவும் அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் சில வெளிப்புற வேதிப்பொருட்களாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், அந்த விளக்கங்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிறமாற்றம் வேதிப்பொருளால் ஆன வெளிப்புற மாசாக இருக்கலாம் எனவும், அவை கழுவி அகற்றக்கூடியதாக இருக்கலாம் என்றும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாய்களின் நிறமாற்றம் அந்நாட்டு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இத்தகைய கடுமையான சூழ்நிலையில் நாய்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதும் அவர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில், கதிர்வீச்சு, கனிம உலோகங்கள் மற்றும் மாசு ஆகியவற்றுக்கு எதிரான மரபணு மாற்றங்களால், இந்த நாய்கள் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அந்த நாய்களுக்கு ஏற்பட்டுள்ள நீல நிறமாற்றம், அவற்றின் புதிய உயிரியல் மாற்றமா அல்லது வெளிப்புற வேதிப்பொருள் தாக்கமா என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
















