டெல்லியில் UPSC தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது LIVE-IN PARTNER-ஆன FORENSIC மாணவி திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றியது போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
டெல்லியில் உள்ள காந்தி விஹார் பகுதியில் உள்ள கட்டடத்தின் 4-வது மாடியில் கடந்த 6-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபோது அங்கு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் அதே கட்டடத்தில் வசித்து வந்த ராம் கேஷ் மீனா என்பதும், UPSC தேர்வுக்கு அவர் தயாராகி வந்ததும் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்துபோல் தெரிந்தாலும், சிசிடிவி காட்சிகள் அதில் உள்ள மர்மங்களை வெளிச்சமிட்டு காட்டின. அக்டோபர் 5-ம் தேதி முகமூடி அணிந்த இருவர் அக்கட்டடத்திற்குள் நுழைந்ததும், 39 நிமிடங்களுக்குப் பின் ஒருவர் வெளியேறிய நிலையில், இரவு 2.57 மணியளவில் ராம் கேஷ் மீனாவின் LIVE-IN PARTNER-ரான அம்ரிதா சௌஹான் மற்றொருவருடன் வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தன.
அதன் பிறகே தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்த போலீசாருக்கு, அம்ரிதாவின் நடவடிக்கையின் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போன் டவர் லொக்கேஷன் காந்தி விஹார் பகுதியில் இருந்ததை உறுதிசெய்த போலீசார், கடந்த 18-ம் தேதி மொராதாபாத்தில் வைத்து அம்ரிதாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.
தொடர் விசாரணையில் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம் கேஷ் மீனாவை கொலை செய்ததாக அம்ரிதா ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் BSc FORENSIC SCIENCE மாணவியான அம்ரிதா சௌஹான், முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் SSC தேர்வாளரான சந்தீப் குமார் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
தனது சில ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அழிக்க, ராம் கேஷ் மீனா மறுத்ததால் கோபமடைந்ததாகத் தெரிவித்த அம்ரிதா, அவரைச் சுமித் மற்றும் சந்தீபுடன் சேர்ந்து கொன்று விபத்து போல் சித்தரிக்க திட்டம் தீட்டியதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதன்படி கடந்த 5-ம் தேதி மூவரும் சேர்ந்து மீனாவை அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றதும், பின்னர் வீட்டிலிருந்த எண்ணெய், நெய் மற்றும் மதுவை ஊற்றி உடலுக்குத் தீ வைத்ததும் போலீசார் விசாரணையில் அம்பலமானது.
FORENSIC மாணவியாக இருந்த அம்ரிதா கொலையை விபத்துபோல் மாற்றியமைக்க திட்டமிட்டு கொடுத்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
















