மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகியைக் கொலை செய்தவர்களைப் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
கெய்மோர் பகுதியில், பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல தலைவர் நீலு ராஜக், கடந்த செவ்வாய் கிழமை சுட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் நீலு ராஜக் ‘லவ் ஜிஹாத்’ விவகாரத்தில் தலையிட்டதாலேயே மிரட்டப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கொலை வழக்கில் சில தொழிலதிபர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை செய்தது பிரின்ஸ் மற்றும் அக்ரம் கான் என்ற இரண்டு இளைஞர்கள் என்பதை கண்டறிந்தனர். இதில் பிரின்ஸின் தந்தை நெல்சன் ஜோசப், தனது மகனின் இந்தச் செயலை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது பதில் தாக்குதல் நடத்திய போலீசார் இருவரையும் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து வழக்குகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















