நாட்டின் நிகர அந்நிய நேரடி முதலீடு வளர்ந்துவரும் நிலையில், இந்திய வங்கிகள், மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உலகளாவிய முன்னணி நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதை, அனுமதிப்பதில் மத்திய ரிசர்வ் வங்கி நேர்மறையான, அதேசமயம் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தின் மையமாகவும் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் வங்கிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 1991-ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டபின் வங்கிகளின் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகள் கொள்ளப்பட்டன.
2008ம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, இந்தியாவின் வங்கித்துறை கடந்த 11 ஆண்டுகளாகக் கணிசமாக மேம்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தற்போது நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் 630 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. நிகர வருமானத்தால் இந்தியாவில் மிகப்பெரிய துறையாக வங்கித் துறை விளங்குகிறது.
கடந்த ஆண்டு 46 பில்லியன் அமெரிக்க டாலரை வங்கித் துறை ஈட்டியுள்ளது. இது ஆண்டுக்கு 31 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது. உலகளாவிய சராசரி வங்கி வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது அதிக லாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், உலகின் முன்னணி நிதி நிறுவனங்கள் பல இந்திய வங்கிகளில் அதிகம் முதலீடு செய்துள்ளன. கடந்த வாரம், கேரளாவில் உள்ள ஃபெடரல் வங்கியில் 9.99 சதவீத பங்குகளை வாங்குவதாக அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனம் அறிவித்தது.
இந்த மாதத் தொடக்கத்தில், RBL வங்கியில் 60 சதவீத பங்குகளை 3 பில்லியன் டாலர்களுக்கு துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் NBD நிறுவனம் கையகப்படுத்துவதாக அறிவித்தது. இது, இந்திய நிதித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படுகிறது.
இதே போல், சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் முதலீடு செய்து, YES வங்கியின் 25 சதவீதப் பங்குகளை ஜப்பானின் SMBC நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை 670 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் கொடுத்து, சூரிச் இன்சூரன்ஸ் நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது.
இது தவிர, சம்மான் கேபிடலில் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம். இதற்கிடையே, 4,385 கோடி ரூபாய் முதலீட்டில் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை பெய்ன் கேபிடல் நிறுவனம் வாங்கியுள்ளது.
CSB வங்கியில் பெரும்பான்மை பங்குகளை ஐந்து ஆண்டுகளுக்கு வைத்துக் கொள்ள, சிறப்பு ஒப்புதலை கனடாவில் உள்ள ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இது வழக்கமான 40 சதவீத வெளிநாட்டு உரிமை வரம்பை மாற்றிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதமாக வளரும் என்று மத்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் பல மூலதன தளர்வு நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளது. முன்னதாகக் காப்பீடு மற்றும் தனியார் வங்கிகளில் வெளிநாட்டு உரிமைமீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், அரசாங்கமும் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.
அமெரிக்காவின் வர்த்தகப் போர் காரணமாகச் சீனாவின் நிதி அமைப்புகள் நெருக்கடியில் உள்ளது. புவிசார் அரசியல் மாற்றங்கள் வேகமாக அரங்கேறிவரும் நிலையில், உலகளாவிய மூலதனத்திற்கான இயற்கையான மாற்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 டிரில்லியன் அமெரிக்க டாலராகும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். வங்கி, காப்பீடு மற்றும் கடன் வழங்கலில் மூலதனத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில், இந்திய வங்கிகளில் பங்குகளைப் பெறுவது ஒரு சிறந்த முதலீடாக உலகின் முன்னணி நிதி நிறுவனங்கள் கருதுகின்றன.
















