தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியத்திலிருந்து 2.8 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக இந்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மாணவர் இடைநிற்றல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை ஆய்வறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம்குறித்த தரவுகளை இந்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகள், 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகள் எனப் பல்வேறு வடிவங்களில் உள்ள பள்ளிகளின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளன.
அதன்படி தமிழகத்தில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளிகளின் மாணவர்களின் இடைநிற்றல் 2.7சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2021 – 2022ல், அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கல்வியாண்டில் பூஜ்ஜியமாக இருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் 2022-2023ல் 2.3 சதவிகிதமாகவும், 2024-2025ல் 2.7 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.
அதே போல நடுநிலை பள்ளிகளைப் பொறுத்தவரை 2021-2022ல் பூஜ்ஜியமாக இருந்த மாணவர் இடைநிற்றல் 2024-2025ல் 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் 2021-2022ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர் இடைநிற்றல் 4.5 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024-2025 ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயர்ந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 37 ஆயிரத்து 595 அரசுப் பள்ளிகளும், 7 ஆயிரத்து 289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12 ஆயிரத்து சுயநிதிப் பள்ளிகளும் இயங்கி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் அரசுப் பள்ளிகளிலேயே கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் இடைநிற்றலில் பள்ளியை விட்டு விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் பூஜ்ஜியமாகவும், கேரளாவில் 0.8 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 1.4 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 2.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களிடையே நிலவும் பிரச்னைகள், அவர்களின் சமூக பொருளாதார சூழல்கள் காரணமாகவும் இடைநிற்றல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக இருந்தாலும், மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திறன்மிகு வகுப்பறைகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் போன்ற ஏராளமான திட்டங்களைத் தீட்டுவதில் பள்ளிக்கல்வித்துறை செலுத்தும் கவனத்தை மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதிலும், இடைநிற்றலை குறைப்பதிலும் செலுத்த வேண்டும் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.
















