கரீபியன் கடற்பகுதியில் ருத்ர தாண்டவமாடிய மெலிசா சூறாவளி ஜமைக்காவை கடுமையாகத் தாக்கி, அந்த நாடு முழுவதும் அழிவின் தடத்தைப் பதித்து சென்றுள்ளது. மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வீடுகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் சிதறடித்த மெலிசா சூறாவளியின் தாக்கம்குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
ஜமைக்காவின் தென் மேற்கு பகுதியில் கடந்த 28-ம் தேதி கரையை கடந்த மெலிசா சூறாவளி, அந்நாட்டை 295 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிப் பெரும் சேதத்தை விளைவித்தது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் பதிவான மிகச் சக்திவாய்ந்த சூறாவளியாக மெலிசா கணிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும்போது ஆக்ரோஷம் காட்டிய மெலிசா சூறாவளியால் வீடுகளின் கூரைகள் பறந்ததுடன், கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்நிலைகளும் பெருக்கெடுத்து ஓடின. அத்துடன் இந்தச் சூறாவளியால் நாட்டின் 77 சதவீத மக்கள் மின்சாரமின்றி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மெலிசா சூறாவளியின் தாக்கம் தீவிரமடைந்தபோது அதன் கண்பகுதியை அமெரிக்க செயற்கைக்கோள் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டது. அதனைக் கண்ட உலக மக்கள் சூறாவளியின் தீவிரத்தை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க விமானப்படையின் சிறப்பு பிரிவான HURRICANE HUNTERS, ராணுவ விமானத்தின் உதவியுடன் மெலிசா சூறாவளியின் கண் பகுதிக்குள் நுழைந்து அதனை வீடியோ பதிவு செய்தனர். அது தொடர்பான காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட செயிண்ட் எலிசபெத் மாவட்டத்தில் மருத்துவமனைகள் உட்பட பல கட்டடங்கள் கடும் சேதமடைந்துள்ளன.
அப்பகுதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ் தெரிவித்துள்ளார். அங்குப் பல குடும்பங்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ளதாகவும், ஆபத்தான சூழல் நிலவுவதால் மீட்புக் குழுக்கள் அவர்களை நெருங்கமுடியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரசு காப்பகங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதியை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் நீர்நிலைகளில் உள்ள முதலைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறிக் குடியிருப்பு பகுதிகளில் உலாவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது.
இந்தக் கடுமையான சூழலைச் சமாளிக்க வேண்டி ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், உள்ளூர் மக்களும், பல சுற்றுலா பயணிகளும் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் மிகப் பயங்கரமானது என விவரித்துள்ளனர். இந்நிலையில், கரீபியன் கடல் பகுதி வழக்கத்தைவிட அதிக சூடானது மெலிசா சூறாவளியின் ஆக்ரோஷத்தை தீவிரப்படுத்தியதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜமைக்காவை தகர்த்தெறிந்த நிலையில் மெலிசா சூறாவளி தற்போது கியூபாவை நோக்கி நகர்ந்து வருகிறது. கியூபா மக்களுக்கு அதி கனமழை மற்றும் கடலோர வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் அமைதியாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென அதிபர் மிகேல் டியாஸ் கானெல் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுழன்றடித்த மெலிசா சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் கடுமையானது என்றாலும், இதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் மீள்கட்டுமான பணிகள்தான் மேலும் சவால் நிறைந்ததாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
















