பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மஸூத் அசார், “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெண்கள் பிரிவை உருவாக்கி அவர்களை மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
ஜெய்ஷ்-இ-மொஹம்மத் என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான மஸூத் அசார் “ஜமாஅத்-உல்-முமினாத்” என்ற பெயரில் பெண்களுக்கான புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி, அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரிவுக்குப் பெண்களை சேர்ப்பது குறித்து அவர் பேசிய 21 நிமிட ஆடியோ வெளியான நிலையில், அதில் மஸூத் அசார் தனது திட்டம்குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எதிராளிகள் தங்கள் படைகளிலும், ஊடகங்களிலும் இந்து பெண்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய பெண்களை முன்நிறுத்துவது அவசியம் என மஸூத் அசார் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரிவில் சேரும் ஒவ்வொரு பெண்ணும் தனது இறப்புக்கு பின் நேரடியாகச் சொர்க்கத்துக்கு செல்வார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பிரிவில் சேர்வதற்காகப் பாகிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளைகள் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள மஸூத் அசார், அவை ‘முந்தாஸிமா’ எனப்படும் பெண் பொறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தங்கள் தலைவர்களின் மனைவிகள், உயிரிழந்த தீவிரவாதிகளின் உறவினர்கள் மற்றும் ஏழ்மையில் வாடும் பெண்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்கள் மூலம் புதிய பிரிவுக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆண்களைப் போலவே இந்தப் பிரிவில் சேரும் பெண்களுக்கும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும், முதல் 15 நாட்கள் “தௌரா-இ-தஸ்கியா” எனப்படும் ஆயுத பயிற்சியும், அதன் தொடர்ச்சியாக “தௌரா-அயாத்-உல்-நிசா” எனப்படும் மத போதனைகளும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர மஸூத் அசார் எழுதிய “ஏ முஸல்மான் பெஹ்னர்” என்ற சிறு புத்தகமும் அவர்களுக்குப் பாடதிட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த புதிய பிரிவில் சேரும் பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசக்கூடாது என்ற கடுமையான விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஜெய்ஷ் அமைப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரகசிய ஆன்லைன் வகுப்புகளையும் தொடங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மஸூத் அசாரின் சகோதரி சமைரா, உம்மே மஸூத் என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் இந்த வகுப்புகளை நடத்துவதாகப் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஸூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஜெய்ஷ் அமைப்பில் தலைமை பொறுப்புகளை வகித்து வரும் நிலையில், பெண்களை வைத்துப் புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் மஸூத் தனது அமைப்பின் சக்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தியாவை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அந்த அமைப்பின் தற்போதைய முயற்சி இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்திற்கே மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
















