டெல்லியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழை முயற்சி தோல்வியுற்றதால், வான்பரப்பை சுத்தப்படுத்தி மாசுபாட்டை குறைக்கும் திட்டம் மீண்டும் கனவாகிப்போனது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டின் குளிர் காலத்திலும் மாசின் அளவு அதிகரித்து வருகிறது. குளிர்ந்த வானிலை, குறைந்த காற்றோட்டம், வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள் மற்றும் பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களில் ஏற்படும் பயிர் எரிப்புகள் ஆகியவை சேர்ந்து தலைநகரத்தை ஒரு புழுதி மண்டலமாக மாற்றியுள்ளன.
இதன் விளைவாக அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இதய நோய், கண் எரிச்சல் போன்ற உடல் நலப் பிரச்னைகள் பெருகி, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அதீத மாசு காரணமாகப் பள்ளிகள் மூடப்படுவதும், விமான போக்குவரத்து தடைபடுவதும் அங்குச் சாதாரணமாகிவிட்ட நிலையில், டெல்லி மக்கள் நாள்தோறும் சுவாசிக்கவே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் செயற்கை மழையை ஏற்படுத்தும் மேக விதைப்பு திட்டத்தை டெல்லி அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்காக ஐஐடி கான்பூருடன் இணைந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 மேக விதைப்பு முயற்சிகளை டெல்லி அரசு திட்டமிட்டது.
சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு ஆகிய வேதிப்பொருட்களை விமானங்கள் மூலம் மேகங்களில் தெளிப்பதே மேக விதைப்பு முறை என்றழைக்கப்படுகிறது. சில்வர் அயோடைடு பனிக்கட்டியின் அமைப்பை ஒத்திருப்பதால் அதைச்சுற்றி நீர்த்துளிகள் உருவாகி மேகங்களைக் கனமாக்குவதால் மழைப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
அப்படி மழை பொழியும் பட்சத்தில் காற்றில் உள்ள மாசின் அளவை குறைத்து வான்பரப்பை தூய்மைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2009-ல் மும்பையிலும், 2008 முதல் 2011 வரை ஆந்திராவிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை.
இந்நிலையில், அண்மையில் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட மேக விதைப்பு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. மேக விதைப்பு மேற்கொள்ள வானிலையில் 50 சதவீதம் ஈரப்பதம் கட்டாயமாகத் தேவைப்படும் நிலையில், டெல்லி வானிலையின் ஈரப்பதம் வெறும் 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே இருந்ததால் மழை உருவாகும் வாய்ப்பு குறைந்து மேக விதைப்பு முயற்சி தோல்வியுற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் தோல்வி செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்தும் திட்டத்தை மீண்டும் கனவாக்கியுள்ள நிலையில், இந்த முயற்சி தங்கள் குழுவுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் ஐஐடி கான்பூர் இயக்குநர் மணீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் டெல்லி அரசும் முயற்சி தோல்வியடைந்தாலும் அதன் மூலம் காற்றின் தரக்குறியீட்டில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை சூழலைப் பொறுத்து வரும் நாட்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வழிகாட்டுதலுடன் 9 முதல் 10 முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
மேக விதைப்பு ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே எனவும், இதன் மூலம் மழை பொழிந்தாலும் அதன் பலன் ஓரிரு நாட்களில் மறைந்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகையால், காற்று மாசை குறைக்க அரசுக் காடு வளர்ப்பு, வாகன உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, தொழிற்சாலை கழிவு வெளியேற்றத்தை கண்காணிப்பது போன்ற நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நீண்டகால தீர்வைக் காண வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
















