பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே செட்டித் தெருவில் வாடகை கட்டடத்தில் அரசு பள்ளி மாணவிகளின் சமூகநீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50 பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதி முறையாக பராமரிக்காமலும், அசுத்தமாக உள்ளதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விடுதிக்கு நிரந்தரமான சமையல் ஆள் இல்லாததால் தாங்களே சமைத்து சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர். விடுதியில் ஒரே ஒரு கழிவறை உள்ளதாகவும், அந்த கழிவறையில் மேற்கூரை இல்லாததால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மாணவிகள், விடுதியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















