உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு நவம்பர் 24ஆம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் தீர்மானத்தைச் சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில், உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளை மற்றவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களுக்குச் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும்போது கழுத்து பட்டை, முகமூடி இல்லாமல் உரிமையாளர்கள் அழைத்துச் செல்லக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மாநகராட்சி, உரிமம் பெறவில்லை எனில் அடுத்த மாதம் 24ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
















