பொம்மிடி போக்குவரத்து பணிமனையில், திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர், தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..
சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் பொம்மிடி போக்குவரத்து பணிமனையில், திமுகவை சேர்ந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் மாது என்பவர், கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றி வருவதாகக் கூறி, ஒப்பந்த தொழிலாளர்கள் 40 பேரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு பணி வழங்கியதாகத் தெரிகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களிடம் தினந்தோறும் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வேலை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிரந்தர பணியாளரான சௌந்தரராஜன் என்பவரிடம், விடுப்பு வழங்க 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், மேலதிகாரிகளை அனுசரித்தால்தான் தன்னுடன் பயணிக்க முடியும் எனவும் பேசியுள்ளார்.
கேட்ட தொகையைக் கொடுத்தால் தான் விடுப்பு கிடைக்கும் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, தினசரி செல்லும் வழித்தடத்தை மாற்றி, வேறு தடத்தில் பணிமனை மேலாளர் பேருந்தை இயக்கச் சொல்வதால் பொதுமக்கள் புகார் அளிப்பதாகப் பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
புகாருக்குக் காரணமானவர்களை விட்டு விட்டு, ஓட்டுநர்களைப் பணி செய்ய விடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சர்வதிகாரி போல் செயல்படும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















