மும்பையில் பட்டப்பகலில் 17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர், போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார்.
Web Series ஒன்றில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள், நேர்முக தேர்வுக்கு வரலாம் என்ற அறிவிப்பைப் பார்த்த ஏராளமானோர், தங்கள் குழந்தைகளுடன் பவாய் பகுதியில் உள்ள ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளனர்.
சுமார் 100 பேர் வரை Audition-க்கு வந்த நிலையில் அதில் 17 குழந்தைகளை மட்டும் அங்கேயே இருக்கும்படி ரோஹித் ஆர்யா என்பவர் கூறியுள்ளார். பின்னர், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என ரோஹித் ஆர்யா மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஸ்டூடியோ இருந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றிவளைத்த போலீசார், அதிரடிப் படையினரையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து ரோஹித் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் சிலரிடம் பேச நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்க மறுத்தால் கட்டடத்திற்கு தீ வைத்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
இதையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் மற்றும் அதிரடி படையினர் 17 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையின்போது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் ரோகித் ஆர்யா மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















