பழனி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
பழனி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வகையில் பழைய கட்டடங்களை அகற்றப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆண் உள் நோயாளிகள் வார்டு அருகே உள்ள கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக ஆண்கள் வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் அனைவரும் மின்சாரமின்றி இருளில் தவித்தனர். பிறகு மின்சாரம் வரத் தாமதமானதால், வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், மின்சார துண்டிப்பு குறித்து ஒப்பந்ததாரர் தரப்பில் தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்றும், கொடுத்திருந்தால் முன்னதாகவே நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றியிருப்போம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
			 
                    















