சர்தார் வல்லபாய் படேலின் 150- வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் 2014ஆம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம், நர்மதா கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்காகத் தன்னை அர்ப்பணித்து கொள்வேன் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதனை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பிரதமருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு குஜராத்தின் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரன் பரத்வாஜ் தலைமை தாங்கினார்.
பின்னர், தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில், சிஆர்பிஎஃப் படை பிரிவில் இருந்து சௌர்ய சக்ரா விருது பெற்ற ஐந்து பேரும், பிஎஸ்எஃப் பிரிவில் இருந்து 16 வீரப் பதக்கங்கள் வென்றவர்களும் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து, BSF, CRPF, CISF, ITBP பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, குஜராத் காவல் துறையின் குதிரைப் படை, ஒட்டகப் படையின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் காவல்துறை சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் வாள், துப்பாக்கி, தேசியக் கொடியை ஏந்தி வந்து காவல் துறையினர் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வைப் பிரதமர் மோடி கைத்தட்டி கண்டு ரசித்தார்.
 
			 
                    















