தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம் என விமர்சித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார் என்றும், உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி ராஜா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள்வரை பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதை தமிழக மக்கள் அறிவார்கள் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, தமிழகத்தில் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்றுதான் பிரதமர் பேசியிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவினர் குறித்து பேசியதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம் எனக் கூறியுள்ளார்.
மேலும், தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
 
			 
                    















