பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், NDA தேர்தல் அறிக்கையைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டனர்.
அதில், பீகாரில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் எனவும், பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, பீகாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி 6,000 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், பாட்னா, தர்பங்கா, பூர்னியா மற்றும் பாகல்பூரில் சர்வதேச விமான நிலையம் மற்றும் 4 புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் உள்கட்டமைப்பில் 1 லட்சம் கோடி முதலீடு செய்வதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா திறன் மையம் அமைக்கப்படும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
			 
                    















