வெறும் 23 பேர் பணியாற்றிய இஸ்ரோவில் தற்போது 30 ஆயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றுவது, இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனப் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நம்பி நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டார்.
பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய அவர், மேடையில் பேசியபோது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்துல் கலாமை அப்போது தாங்கள் பிரதமர் என்றே அழைப்போம் என்றும், பின்னாளில் அவர் குடியரசுத் தலைவராகி விட்டார் என்றும் கூறிய அவர், விகாஸ் எஞ்சினை உருவாக்கியதில் பணியாற்றியது, தனக்கு கிடைத்த மறக்க முடியாத பெருமை எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோவில் தான் பணியில் சேர்ந்த போது வெறும் 23 பேர் மட்டுமே இருந்தோம் என்றும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்குச் சான்று எனக் கூறினார்.
மேலும், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, முழு மனதுடன் உழைக்க வேண்டும் என்றும் நம்பி நாராயணன் அறிவுறுத்தினார்.
 
			 
                    















