சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளை மற்றும் 4 கன்றுக் குட்டிகள் கடத்தி சென்று கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் கால்நடைகளை நேர்த்திக் கடனாக வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், அஸ்தம்பட்டியைச் சேரந்த சுமன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள காளையைக் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். கோயில் வளாகத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த காளையை, பக்தர் என்ற போர்வையில் ஒருவர் பழகி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காளையை நைசாக அவிழ்த்துச் சென்ற நபர், இறைச்சி கடைக்கு அழைத்துச் சென்று காளையை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்துள்ளார். இதனிடையே, கோயிலைச் சுற்றி வந்த காளையைக் காணவில்லை என சுமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாகப் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தர்வேஸ் மைதீன் என்பவர் இறைச்சிக்காகக் காளையை கொன்றது தெரியவந்தது.
மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 4 கன்று குன்றுகளையும் தர்வேஸ் மைதீன் கடத்தி சென்று கொன்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தர்வேஸ் மைதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
			 
                    















