அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது.
ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் சந்தித்துப் பேசினர்.
முடிவில், 10 ஆண்டுக்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் தலைவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
			 
                    















