டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும் எனக் கோரி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்றைய டெல்லியானது கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்பு மகாபாரதக் கதையில் பாண்டவர்களின் தலைநகரமாக இருந்த இந்திரபிரஸ்தா என இந்துக்களால் நம்பப்படுகிறது.
இதனால் வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில், டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்ற வேண்டும் எனக் கடந்த சில நாட்களாகவே கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் இதனை வலியுறுத்தி டெல்லி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பழைய டெல்லி ரயில் நிலையத்தை இந்திரபிரஸ்தா சந்திப்பு என்றும், சர்வதேச விமான நிலையத்தை இந்திரபிரஸ்தா விமான நிலையம் என்றும் பெயர் மாற்ற வேண்டும் எனப் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பெயர் மாற்றம் ஒரு வரலாற்று நீதி மட்டுமல்லாமல், கலாச்சார மறுமலர்ச்சியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும் எனவும் கண்டேல்வால் கூறியுள்ளார். கடந்த மாதம் இதே கோரிக்கையை விஷ்வ இந்து பரிஷத்தும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
















