திண்டுக்கல் பஞ்சப்பட்டி கிராமத்தில் அரசு பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த இந்துக்களுக்கும் உரிமையுள்ளது எனக்கூறி, அன்னதான நிகழ்வுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்ச்சி நடத்த, கிறிஸ்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்தி கொள்ள அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்து மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கிறிஸ்தவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட மைதானத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு தந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் மட்டுமே மைதானத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில், என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளதாகவும், கோயில் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி வழங்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அரசு பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அனைவருக்கும் உரிமையுள்ள பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த தடை விதிப்பது அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக, மைனாரிட்டியாக வாழும் இந்துக்களுக்கான உரிமையை மறுப்பது சட்டவிரோதம் எனக்கூறிய நீதிபதி, பொது மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 
			 
                    















