முன்னாள் WWE போட்டியாளரும், பேஸ்பால் வீரருமான ரிங்கு சிங், பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகளவில் புகழ்பெற்றிருந்த அவர் தற்போது ஆன்மிக பாதைக்கு மாறியுள்ளது பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், தனது சிறு வயது முதலே மல்யுத்தம் மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தார். ஆரம்ப காலத்தில் பேஸ்பால் தகுதி தேர்வில் 87 மைல் வேகத்தில் பந்தை எறிந்ததன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரிங்கு சிங், அமெரிக்காவில் நடைபெறும் தொழில்முறை பேஸ்பால் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
இவரது கதையும், சக விளையாட்டு வீரரான தினேஷ் படேலின் கதையும் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான டிஸ்னி திரைப்படமான மில்லியன் டாலர் ஆர்ம் மூலம் உலகப் புகழ் பெற்றது. பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல WWE சண்டை போட்டிகளில் தன்னை இணைத்துக்கொண்ட ரிங்கு சிங், தனது பாரம்பரிய அடையாளத்துடன் முதல் முறையாக “வீர் மஹான்” என்ற பெயரில் களமிறங்கினார்.
அங்குத் தனது மல்யுத்த யுக்திகளை பயன்படுத்தி விளையாடியதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக முன்னணி வீரர்களான ஜான் சீனா மற்றும் தி கிரேட் காளி ஆகியோருடன் மோதி வென்றது, ரிங்கு சிங்கின் புகழை மேலோங்கச் செய்தது. அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகராஜின் ஆசிரமத்தில் தோன்றிய ரிங்கு சிங், அங்குத் தன்னார்வ சேவைகளில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்நிலையில், உலக புகழிலிருந்து ஆன்மிக பாதைக்கு மாறிய அவரது முடிவைப் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஒருகாலத்தில், உலக அரங்கில் தனது உடல் வலிமை மற்றும் தனித்திறமைகளுக்காக அறியப்பட்ட ரிங்கு சிங், வீடியோவில் மிக எளிமையான, ஆன்மிக தோற்றத்தில் காட்சியளித்தார்.
பிரேமானந்த் ஜி மகராஜ் ஆசிரமத்தில் தரையை துடைப்பது போன்ற பல்வேறு சேவைகளில் அவர் ஈடுபட்ட காட்சிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அவர் பிரேமானந்த் ஜி மகராஜுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் “நீ உலகத்திற்கு தகுதியானவன் என்று உணர்ந்தால் என்னிடம் வா” என மகராஜ் அவருக்கு உபதேசம் வழங்க, அதற்கு ரிங்கு சிங் பணிவுடன் தலையசைத்து பதிலளித்திருந்தார்.
இவ்விருவருக்கு இடையிலான இந்த உரையாடல் அதனைக் கண்ட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், உலகறிந்த ஆஜானுபாகுவான 6 அடி 4 அங்குல நபர், சுவாமி ஜி-யின் முன்னிலையில் ஒரு சிறுவனாக மாறிவிட்டார் என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பேஸ்பாலில் தொடங்கி WWE போட்டிகளில் தொடர்ந்த ரிங்கு சிங்கின் வாழ்க்கை, தற்போது பிருந்தாவன் ஆசிமத்தின் ஆன்மிக கதவுகளுக்குள் நுழைந்துள்ளது அவரது மொத்த வாழ்க்கை பயணத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
















