ஆசியக் கோப்பையை எடுத்துச் சென்ற பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, அதனை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார்.
இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இதுவரையிலும் அந்த ஆசிய கோப்பை பிசிசிஐ வசம் ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியபோதும் பலனில்லை.
இந்நிலையில் ஆசிய கோப்பை 48 மணி நேரத்தில் ஒப்படைக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இந்தப் பிரச்னையை அதிகாரப்பூர்வமாக எழுப்புவோம் என பிசிசிஐ இணைச் செயலாளர் தேவஜித் சைகியா உறுதிபட தெரிவித்துள்ளார்.
















