காங்கிரஸ் கட்சி பலமுறை RSS அமைப்பை தடை செய்ய முயன்றும் மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டதாக RSS அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, RSS அமைப்பை தடை செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு RSS பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரோ ஒருவரின் விருப்பத்தின்பேரில் RSS அமைப்பை தடை செய்துவிட முடியாது என காட்டமாக கூறினார். தடை கோருபவர்கள் அதற்கான சரியான காரணத்தை கூற வேண்டுமென தெரிவித்த அவர், RSS அமைப்பை தடை செய்ய 3 முறை சதி நடந்தபோதும் அதற்கு சமுதாயமும், நீதிமன்றமும் சம்மதிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.
நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் கலாசாரத்திற்காக பாடுபடும் ஒரு அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஒரு தலைவர் கூறினாலும், அதற்கான சரியான காரணத்தையும் அவர் கூறியே ஆக வேண்டும் எனவும் தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி கொடுத்துள்ளார்.
















