திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதியடைந்ததாக பிரபல டிராவல் யூடியூபர் கோபிநாத் வீடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அண்மையில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், பிரபல டிராவல் யூடியூபர் கோபிநாத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விரதம் இருந்து முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள் பல மணி நேரமாக வரிசையில் அவதியடைந்ததாகவும், கைக் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி விழாவின்போது, அரசியல் செல்வாக்கும், பணமும் உள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், சாதாரண பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில், பணமும் பதவியும் இருந்தால் மட்டுமே திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டதாகவும், கூட்டமான நாட்களில் யாரும் திருச்செந்தூருக்கு வர வேண்டாம் என்றும் அவர் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
















