இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆராவில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மகாபந்தன் கூட்டணிக்குள் நிலவும் கடுமையான பிளவுகளை அம்பலப்படுத்தினார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் ரவுடித்தனம் செய்வதாக குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் பதவியை காங்கிரசிடமிருந்து RJD திருடிவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்தார்.
மகாபந்தன் கூட்டணிக்குள் நடக்கும் மோதல்களுக்கு மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, விக்சித் பீகார் என்பதுதான் விக்சித் பாரத்தின் அடித்தளம் என்றும் தெரிவித்தார்.
மேலும், NDA தேர்தல் அறிக்கை நேர்மையானது எனக்கூறிய பிரதமர் மோடி, மகாபந்தனின் தேர்தல் அறிக்கையை பொய்களின் மூட்டை என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மகாபந்தன் தலைவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும், பீகார் மக்கள் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















