அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடக்கத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க, அந்நாட்டு நாடாளுமன்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாவிட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாது. அந்த வகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
இதையடுத்து அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. கடந்த 31 நாட்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்திய மதிப்பில் 62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் 2 மாதங்களில் 14 பில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனால் டிரம்ப் அரசு நிர்வாகம் கலக்கமடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், மிரட்டிப் பணம் பறிக்கும் பணிநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஜனநாயக அரசியல்வாதிகள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவை அழிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















