கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் களமிறங்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஆப்ரிக்க கண்டத்தில் சுமார் 20 கோடி பேர் வாழும் மிகப்பெரிய நாடு நைஜீரியா. இங்கு வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு பகுதிகளில் இரு மதத்தினரும் வாழ்ந்து வரும் நிலையில், யார் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்பதில் அவர்களுக்குள் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, நைஜீரியாவின் தெற்கு மாகாணங்களில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், பிளேட்டோ மற்றும் பெனுவே மாகாணங்களில், ஈஸ்டர் பண்டிகை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 240 கிறிஸ்தவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
அதேபோல் ஜுன் மாதம், பெனுவே மாகாணத்தில் உள்ள யெல்வாடா கிராமத்தில் வசித்தும் வரும் 200 கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயதமேந்திய தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள் தங்கியிருந்த வீடுகளைக் குறிவைத்து எரித்ததில் 200 பேர் உடல் கருகி பலியாகினர். இரண்டு மாத காலத்திற்குள் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தப் படுகொலை சம்பவங்கள் சர்வதேச அரங்கிலும் எதிரொலித்தது. குறிப்பாக, பெரியண்ணன் நாடான அமெரிக்காவை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியது. இந்நிலையில், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்க ராணுவம் நேரடியாகக் களமிறக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நைஜீரிய அரசு கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதில் தவறி விட்டதாகவும், அமெரிக்கா இதைக் கைக்கட்டி வேடிக்கை பார்க்காது எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்கா வழங்கும் அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் களமிறங்கினால், கிறிஸ்தவர்களின் உயிரைப் பறித்த ஒவ்வொரு பயங்கரவாதியும் உயிரை விடும் சூழல் ஏற்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நைஜீரிய அரசே மேற்கொள்ள வேண்டும், செய்யத் தவறினால் அமெரிக்க ராணுவம் செய்து முடிக்கும் என்றும் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு திட்டவட்டமாக மறுத்துள்ளார். நைஜீரியா எப்போதும் மதசுதந்திரமும், சகிப்புத்தன்னையும் கொண்ட நாடு எனவும் கூறியுள்ளார்.
மத ரீதியிலான தாக்குதலைத் தனது அரசு ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நைஜீரியாவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆட்சியை நிறுவத் துடிக்கும் போகோ ஹராம் பயங்கரவாத குழு, அதற்குத் தடையாக இருக்கும் கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைக் கண்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
















