மாணவர்களின் கல்வித்திறனோடு அவர்களின் சிந்தனைத் திறனையும் அடிப்படையாகக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வடிவமைத்திருக்கும் செயலி மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வைப்ரன்ஸ் ஹப் செயலிகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக வைப்ரன்ஸ் ஹப் (www.vibrancehub.org) என்ற இணையதளத்தையும், மொபைல் ஆப்பையும் உருவாக்கியுள்ளார்.
மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியில் கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் ஆப்பில், செயற்கை நுண்ணறிவு காலத்திற்கு ஏற்பத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் சிந்திக்கும் படைப்பாற்றலை குறைக்குமோ என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், வைப்ரன்ஸ் ஹப் செயலி மக்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைப்ரன்ஸ் ஆப், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் லைப் டைம் கிண்டர்கார்டன் பிரேம் ஒர்க்கின் படி “ஆர்வம், திட்டங்கள், தோழமை, விளையாட்டு” ஆகிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
புத்தக அறிவை மட்டுமல்லாது , சிந்தனை திறன், தன்னம்பிக்கை, மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கும் கருவியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வைப்ரன்ஸ் ஹபில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம் என்றும் வாரந்தோறும் எளிமையான முறையில் பிராஜக்ட்டை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்வியை பெறுவதோடு, தூக்கம், மன அழுத்தம், எண்ண ஓட்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வைப்ரன்ஸ் ஹப் செயலி இலவசமாகக் கிடைப்பது மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.
















