வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
சென்னைத் தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களை நீக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் விநாயகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறும் என்றும்,
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி சிறப்பு திருத்தத் தீவிர பணிகள் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
1950ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 முறைச் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.
















