சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
இளமனூர் பகுதியில் சாதிய தலைவர்களின் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுச் சாதிய தலைவர்களின் பிளக்ஸ் பேனர்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், நீண்ட நாட்களாகப் பிளக்ஸ் பேனர்கள் அகற்றாததால் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், சாதி தலைவரின் பிளக்ஸ் பேனரைப் பட்டா இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நபர்கள் பிளக்ஸ் பேனரை உடைத்து அப்புறப்படுத்தியதால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
















