கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாகக் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துடியலூர் அருகே குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதில், தலைமைக் காவலருக்கு இடதுகையில் காயம் ஏற்பட்ட நிலையில், 3 பேர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். காலில் குண்டடிப்பட்ட 3 பேரும் கையில் காயம் ஏற்பட்ட தலைமைக் காவலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட 3 பேரில் குணா என்பவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோர் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.
மேலும், 3 பேர் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
			















