திருநெல்வேலியின் பிரதான சாலைகளில் ஒன்றான கேடிசி நகர் மங்கம்மாள் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலைப் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதால் வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கே டி சி நகரில் உள்ள மங்கம்மாள் சாலை அப்பகுதியிலேயே அதிக மக்கள் வசிக்கக் கூடிய சாலையாக அமைந்திருக்கிறது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சேதமடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கேடிசி நகர்க் காமாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி சீவலப்பேரி சாலைப் பாத்திமா கோயில் அருகே முடிவடையும் இந்த மங்கம்மாள் சாலைச் சுமார் 4 கிலோ மீட்டர் வரை நீளக்கூடிய சாலையாக இருக்கிறது.
கேடிசி நகர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள டீச்சர்ஸ் காலனி, ஐயப்பன் நகர், டார்லிங் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் பிரதான சாலையான இந்தச் சாலை சேதமடைந்த நிலையில் இருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்தச் சாலைகள் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது அப்பகுதிகளில் வணிகம் செய்து வரும் வியாரிபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்தப் பகுதியை சீரமைத்துத் தர வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், தங்களின் கோரிக்கையைக் கேட்க கூட தயாராக இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிப்போனச் சாலைவசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது தங்களின் கடமை என்பதை மறந்துவிட் மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்துவரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
			















