வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய கரோலின் லீவிட், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி வருவதாகவும், இரு நாடுகளின் வர்த்தகக் குழுக்களும் தொடர்ந்து தீவிரமான விவாதங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றத்திற்கான அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டங்களின்போது பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசியதாகவும், அந்த நிகழ்வில் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் கூறினார். அதிபர் டிரம்ப் நேர்மறையானவர் என்றும், இந்தியா-அமெரிக்க உறவில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சிறப்பாகச் செயல்படுகிறார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
















