திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா வரும் வாகனத்திற்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா வரும் 21ம் தேதி ஊர் காவல் தெய்வமான தூர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. பின்னர் 24ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம் நடைபெற்று அனுதினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு அலுவலகத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
அவ்வாறு பஞ்ச மூர்த்திகள் உலா வரும் வாகனங்களான மயில் வாகனம், காமதேனு வாகனம், பத்து தலை வாகனம், சூரிய பிறை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய திருவிழாவான ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் உலா வரும் மர தேர் வடத்தின் சங்கிலிகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















