பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பீகார் மாநில வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13 புள்ளி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பீகார் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இளையதலைமுறைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், பீகாரில் முதற்கட்ட ஜனநாயக திருவிழா தொடங்கியதாகவும் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள பக்தியார்பூர் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவை செய்தார். பின்னர் வாக்கு செலுத்தியதற்கான விரல் மையை அவர் காட்டினார்.
பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் வீட்டுவிட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டு எனவும் நவம்பர் 14ம் தேதி புதிய அரசு ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.
















