மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல நக்சலைட்டான சுனிதா ஓயம், தனது ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.
ஏறக்குறைய 5 அடி உயரம் கொண்ட 23 வயது பெண்மணியான சுனிதா ஓயம் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு பிரபல நக்சலைட் ஆவார். மாலாஜ்காண்ட் – தர்ரேகாசா தளத்தின் AREA COMMITTEE உறுப்பினராகச் செயல்பட்டு வந்த இவரது தலைக்கு 3 மாநில போலீசாரும் 14 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நவீன ரக INSAS துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நேரடியாகப் பாலாகட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த சுனிதா ஓயம், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்த சுனிதா, தனது குடும்பத்தினருடனான தொடர்பை இழந்ததையடுத்து பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் சுனிதா ஓயமை நக்சல் இயக்கத்தினர் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நக்சல் இயக்கத்தினரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சுனிதா, நக்சல் குழுவின் பாதுகாப்பு படையில் இணைந்து AREA COMMITTEE உறுப்பினர் பொறுப்பிற்கு உயர்ந்திருந்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி சரணடைய முடிவெடுத்த சுனிதா ஓயம், தனது துப்பாக்கி மற்றும் உடைமைகளுடன், HAWK FORCE-ன் முகாமை அடைந்தார்.
அப்போது அவரது துப்பாக்கி, 3 மேகசின்கள், 30 குண்டுகள் மற்றும் ஒரு UBGL ஷெல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், சரணடைந்த சுனிதாவுக்கு உதவித்தொகையாக 20 லட்சமும், வீட்டு உதவிக்காக ஒன்றரை லட்சமும், திருமண உதவிக்காக 50 ஆயிரமும், கல்வி உதவிக்காக ஒன்றரை லட்சமும் வழங்க மத்தியப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செயல்பாட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைவது, கடந்த 33 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைப் பொது பாதுகாப்பு நடவடிக்கையின் வெற்றியாகக் கருதும் மாநில அரசு, பிற நக்சல் உறுப்பினர்களையும் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு விரைந்து சரணடைய அறிவுறுத்தியுள்ளது.
















