பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாகப் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்கு மோசடி என்று ராகுல் காந்தி போலியான செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தால், ஏன் பிரமாணப் பத்திரம் கொடுத்து நீதிமன்றத்தை நாடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கு திருட்டு எனக்கூறி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை ராகுல் காந்தி எதிர்க்கிறார் என்றும், பீகாரில் மகா கூட்டணி தோல்வியடையும் என்பதை அறிந்ததால் தான் ஹரியானாவை பற்றி ராகுல் காந்தி பேசுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உண்மையை அறிவார்கள் என்றும், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் அரசியலமைப்பையும் அவமதிப்பதில் ராகுல் காந்தி மும்முரமாக இருக்கிறார் என விமர்சித்த ஜெ.பி.நட்டா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.
















