உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத்துறை விளங்குகிறது எனச் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சொத்து மீட்டெடுப்பு வழிமுறையை இந்தியா உருவாக்கி உள்ளது என்றும், குற்றவாளி மற்றும் குற்றவாளி அல்லாத நபர்களின் சொத்துக்களை முடக்கும் வசதியும் இந்தியாவில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்களை விரைவாக முடக்கவும், பறிமுதல் செய்யவும் இந்தியாவின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டம் உதவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்ஏடிஎப் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே, இந்தியாவின் அமலாக்கத்துறையை முன்மாதிரியாக உள்ளது என்றும், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தான், இந்தியாவின் சொத்து மீட்டெடுப்பு வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் விசாரணை அமைப்புகளை மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான தேவை உருவாகி உள்ளது என எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது.
















