மத்திய அரசு விடுவித்த, 2024 – 2025ம் ஆண்டுக்கான ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஆர்டிஇ எனப்படும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகின்றன. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து இரண்டு ஆண்டு கல்வி கட்டணமான 586 கோடி ரூபாயை மத்திய அரசு அண்மையில் விடுவித்தது.
எனினும் மத்திய அரசு விடுவித்த தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குத் தமிழக அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம், 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆர்டிஇ சட்டத்தின்படி தமிழக அரசு நடந்துகொள்வதில்லை எனவும் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறுகிறது எனவும் தெரிவித்தார்.
மத்திய அரசு விடுவித்த, 2024 – 2025க்கான ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
















